தமிழ்நாட்டில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம் ‘வினாத்தாள் கட்டணம்’ என்ற பெயரில் வசூல் செய்யப்படுவதில் பெரிய அளவில் முறைகேடு நடப்பதாகக் கூறி, லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) இயக்குநருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் மலைக்கொழுந்தன் அனுப்பிய மனுவில், 6 முதல் பிளஸ் 2 வரை மாணவர்களிடம் இக்கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செப். 8 அன்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் அளித்த பதிலில், இவ்வசூலுக்கு எந்த அரசாணையும் வெளியிடப்படவில்லை என குறிப்பிடப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

2025–26 கல்வியாண்டில் மாவட்டம் தோறும் கட்டணம் வெவ்வேறாக வசூலிக்கப்படுவதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உதாரணமாக 6, 7 வகுப்புகளுக்கு கரூரில் ரூ.80, நாமக்கல்லில் ரூ.75, திருவள்ளூரில் ரூ.84; 10ஆம் வகுப்புக்கு கரூரில் ரூ.100, நாமக்கல்லில் ரூ.122, திருவள்ளூரில் ரூ.105; பிளஸ் 2க்கு கரூரில் ரூ.120, நாமக்கல்லில் ரூ.122, திருவள்ளூரில் ரூ.119 என வசூல் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2025–26 ஆண்டுக்கான தகவலின்படி நாமக்கல் மாவட்டத்தில் ரூ.1.27 கோடி, கன்னியாகுமரியில் ரூ.1.37 கோடி, புதுக்கோட்டையில் ரூ.1.4 கோடி வசூலிக்கப்பட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு மாவட்டத்திற்கு சராசரியாக ரூ.1.25 கோடி எனக் கணக்கிட்டால், 38 மாவட்டங்களில் ஆண்டுதோறும் ரூ.50 கோடிக்கு மேல் அரசாணை இன்றி மாணவர்களிடமிருந்து பெறப்படுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

வசூலித்த தொகை தனிநபர்களின் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்து கையாளப்படுவதாகவும், வினாத்தாள் அச்சிடுவதற்கு பொதுத் டெண்டர் கோரப்படாமல் சில அச்சகங்களுக்கு தன்னிச்சையாக ஒப்பந்தம் வழங்கப்படுவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும் தேர்வுக்காக வசூலித்த பணம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் வாகன பழுதுபார்ப்பு உள்ளிட்ட செலவுகளுக்கு தவறாக பயன்படுத்தப்பட்டதாக கள ஆய்வில் தெரியவந்ததாக கூறி, சட்டவிரோத வசூல் மற்றும் நிதி முறைகேடு குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.