சென்னை: தமிழகத்தில் ஆண்டுக்கு மூன்று இலவச சமையல் எரிவாயு (எல்பிஜி) சிலிண்டர்கள் வழங்கும் திட்டத்தை, 2027 ஜனவரி பொங்கல் திருநாளில் தொடங்க தமிழக அரசு தயாராகி வருகிறது. இதற்கான முன்னேற்பாடாக, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து சிலிண்டர் இணைப்பு பெற்ற வாடிக்கையாளர்களின் விவரங்களை அரசு சேகரித்து வருகிறது.

“அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்” திட்டத்தின் முதல் கட்டமாக செயல்படுத்தப்பட உள்ள இந்த முயற்சியில், பயனாளிகளின் வங்கி கணக்கில் தொகை நேரடியாக வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால் சுமார் 1.30 கோடி குடும்பங்கள் பயன் பெறும் என அரசு கணக்கிடுகிறது.

அதிகாரிகள் கூறுவதன்படி, ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்குள் வருமானம் உள்ள குடும்பங்கள், சிறு மற்றும் குறு விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பங்கள் உள்ளிட்டோர் தகுதி பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ.4,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், இதை முதல்வர் விஜய் சமீபத்தில் சட்டசபையில் அறிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொங்கலுக்கு இன்னும் சுமார் மூன்று மாதங்களே உள்ள நிலையில், பயனாளிகளைத் தேர்வு செய்யும் பணியை அரசு தொடங்கியுள்ளது. ஆதார் அடிப்படையில் வழங்கப்பட்ட ரேஷன் கார்டுகளில் சிலிண்டர் இணைப்பு தொடர்பான தகவல்கள் இருப்பினும், மேலும் துல்லியமான விவரம் தேவைப்படுவதால், ஒரு சிலிண்டர்/இரண்டு சிலிண்டர் இணைப்பு பெற்ற குடும்பங்கள் எண்ணிக்கை மற்றும் பிரதமரின் ‘உஜ்வாலா’ திட்டத்தில் இலவச இணைப்பு பெற்றோர் எண்ணிக்கை போன்ற தகவல்கள் எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து பெறப்படுகின்றன.

மேலும், ரேஷன் கார்டுதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் மூலம் தகவல் சேகரித்து, மாநிலத்தின் மின் ஆளுமை (இ-கவர்னன்ஸ்) முகமை வழியாக சரிபார்க்க திட்டமிடப்பட்டுள்ளது. பொங்கல், தமிழ் புத்தாண்டு, தீபாவளி ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு ஆண்டுக்கு மூன்று முறை, பண்டிகைக்கு முன்பான நாட்களில் பயனாளிகளின் வங்கி கணக்கில் தொகை செலுத்தும் வகையில் திட்டம் அமைய உள்ளது.