புதுடில்லி: தேர்தல் தலைமை ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக ‘இண்டி’ கூட்டணி கட்சிகள் டில்லியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. மாணவர் அமைப்புகள் உள்ளிட்ட பலரும் போராட்டத்தில் இணைந்ததால் தலைநகரில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

உச்சநீதிமன்றத்தை நோக்கி பேரணியாக சென்று தலைமை நீதிபதி சூர்யகாந்தை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சந்திப்பை தலைமை நீதிபதி நிராகரித்ததாக கூறப்படுகிறது. தேசிய மனித உரிமை ஆணையத்தின் 33வது ஆண்டு நிகழ்ச்சியில் பேசிய அவர், காங்கிரஸ் தரப்பில் வந்த கடிதத்திற்கு ஏன் சந்திக்க முடியாது என்பதை விளக்கி பதில் அளித்துவிட்டதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன் கார்கே அனுப்பிய கடிதத்திற்கு தலைமை நீதிபதி அளித்த பதில் கடிதத்தை காங்கிரஸ் வெளியிட்டது. அதில், மாலை 4 முதல் 5 மணிக்குள் சந்திக்க விருப்பம் தெரிவித்து அனுப்பிய கடிதத்தில் தேர்தல் ஆணையம் தொடர்பான விவகாரங்கள், மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவங்கள், மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டமை, ரயில்கள் ரத்து செய்யப்பட்டமை உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அனைத்து விஷயங்களும் உச்சநீதிமன்றத்தின் விசாரணையில் இருப்பதால், நிலுவை வழக்குகள் குறித்து சந்தித்து விவாதிப்பது நீதித்துறை நெறிமுறைகளுக்கும் கண்ணியத்துக்கும் ஒவ்வாதது என அவர் கூறினார். மேலும், நிர்வாக ரீதியாக மனு அளிப்பதை விட நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்து நீதித்துறை வழிமுறைகளை நாடுவது பொருத்தமானது என்றும், தொடர்புடைய சில வழக்குகள் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வர உள்ளதாகவும், நேரிலோ அல்லது மின்னணு முறையிலோ மனுக்கள் தாக்கல் செய்யலாம்; சட்டப்படி விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.