புதுடில்லி: தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை தங்களின் போராட்டங்கள் தொடரும் என கரப்பான் பூச்சி கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், போராட்டம் தலைநகரைத் தாண்டி நாடு முழுவதும் பரவியுள்ளதாக கூறினர்.

போராட்டங்கள் தொடர்பாக நீதிமன்றங்கள் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளதையும், அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் போராட்டம் நடத்தக் கூடாது என நீதிமன்றம் கூறியதையும் அவர்கள் குறிப்பிட்டனர். அதே நேரத்தில், அரசு நெருக்கடிகளுக்கு அஞ்ச மாட்டோம் என்றும், போராட்டத்தை நிறுத்துவதாக எந்த பத்திரத்திலும் கையெழுத்திடவில்லை என்றும் தெரிவித்தனர்.

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கரப்பான் பூச்சி கட்சி தலைவர் அபிஜித் தீப்கே மற்றும் அவரது கூட்டாளிகள் சவுரவ் தாஸ், அஷுதோஷ் ரங்கா ஆகியோரை டில்லி போலீசார் தடுப்புக் காவலில் இருந்து விடுவித்தனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிரான போராட்டம் மற்றும் அனுமதி மீறி ஒன்றுகூடியது தொடர்பாக 20க்கும் மேற்பட்ட எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும், போராட்டத்தில் பங்கேற்க ஜெர்மனியில் இருந்து வந்த யூடியூபர் துருவ் ரதியை ஹரியானாவின் குருகிராமில் உள்ள அவரது வீட்டில் இருந்து தடுப்புக் காவலில் கைது செய்து பின்னர் விடுவித்தனர். சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில், தன்னை தடுப்புக் காவலில் கைது செய்யவில்லை; கடத்திச் செல்லப்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் வைத்திருந்ததாக அவர் கூறினார்.

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து டில்லியில் மெட்ரோ உள்ளிட்ட ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்ட பிறகு இயல்பு நிலை திரும்பி சேவைகள் மீண்டும் வழக்கம்போல் இயங்கின. இதற்கிடையில், உடல்நலக் குறைவால் உயிரிழந்த தனது பாட்டி சாவித்ரி பாய் சங்கர்ராவ் தீப்கே (85) இறுதிச் சடங்கில் பங்கேற்க தீப்கே டில்லியில் இருந்து மஹாராஷ்டிரா சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றார்.