சென்னையில் மாணவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஹிந்தி பெயரில் விளம்பரப்படுத்தப்பட்டதாகக் கூறி, காங்கிரசை தி.மு.க. கடுமையாக விமர்சித்துள்ளது.

தமிழக காங்கிரஸ் சார்பில் தீவுத்திடலில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

ஆனால் நிகழ்ச்சிக்கு தமிழில் பெயர் வைக்காமல், “சத்ரோன் கி கூஞ்ச்” என்ற ஹிந்தி பெயரை முன்னிறுத்தி விளம்பரப்படுத்தியதாக தி.மு.க. தரப்பு குற்றம்சாட்டியது. இது தமிழகத்தில் தவறான செய்தியைத் தரும் எனவும் அவர்கள் கூறினர்.

சமூக வலைதளங்களில், தமிழகத்திற்கு வரும்போது தமிழின் முக்கியத்துவத்தை பேசும் ராகுல், தன் கட்சியின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியில் ஹிந்தி பெயரை மட்டும் முன்னிறுத்துவது “இரட்டை நிலைப்பாடு” என தி.மு.க. ஆதரவாளர்கள் விமர்சனம் முன்வைத்தனர்.

தி.மு.க. செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் சரவணன், தனது பதிவில், மாணவர்களிடம் பேசும்போது ராகுல் பிரதமர் மோடி தமிழ்மொழி மற்றும் கலாசாரத்தின் மீது தாக்குதல் நடத்துகிறார் என விமர்சித்ததாகவும், அதே சூழலில் ஹிந்தி பெயரை வைத்திருப்பது முரண்பாடு எனவும் குறிப்பிட்டுள்ளார்.