சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் எண்ணெய் வளம் மிக்க முக்கிய நகரமான தம்மாமில் உள்ள கிங் பஹத் சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து நேற்று இரவு தாக்குதல் நடந்ததாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஏமனில் செயல்படும் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி தலைமையிலான கூட்டுப் படைகளுக்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. சமீப நாட்களில் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து ஹவுதிகள் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை தொடர்ச்சியாக நடத்தியதாக கூறப்படுகிறது.
அந்த தாக்குதல்களில் இந்தியர் ஒருவர் உட்பட 13 பேர் உயிரிழந்ததாகவும், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியானது. மேலும், சவுதி அரேபியாவில் உள்ள விமான நிலையங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும், விமானப் போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் பயணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் ஹவுதி படைகள் மிரட்டல் விடுத்திருந்ததாக குறிப்பிடப்படுகிறது.
இதுகுறித்து சவுதி அரேபியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், தம்மாம் விமான நிலையம் மீது தாக்குதல் நடந்ததாகவும், ஆய்வுப் பணிகள் மற்றும் சேத மதிப்பீடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது. தம்மாம் தாக்குதலில் உயிரிழப்பு அல்லது காயம் தொடர்பான அதிகாரப்பூர்வ விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.





