எஸ்ஐஆர், ஓட்டுத் திருட்டு உள்ளிட்ட விவகாரங்களில் பாஜவுக்கு சாதகமாக தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் செயல்பட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதை முன்வைத்து டில்லியில் ராகுல் காந்தி தலைமையில் கடந்த சில நாட்களாக போராட்டங்கள் நடந்த நிலையில், போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.
சில நாட்களுக்கு முன்பு, இண்டி கூட்டணி தலைவர்கள் ஜனாதிபதியை சந்தித்து மனு அளித்தனர். திங்களன்று டில்லியில் தலைமை நீதிபதி சூர்யகாந்த்தை சந்தித்து மனு அளிக்க திட்டமிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால், தலைமை நீதிபதி அவர்களை சந்திக்க மறுத்து, மனு அளிப்பதற்குப் பதிலாக மனுத் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ், மல்லிகார்ஜுன் கார்கே, மம்தா பானர்ஜி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் உச்சநீதிமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.
இதனிடையே, ராகுலின் சட்டக்குழுவினர் உச்சநீதிமன்ற பதிவாளரை சந்தித்து, தேர்தல் கமிஷன் மீதான புகார் தொடர்பாக நேரில் மனுத் தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்தனர். அதற்காக கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.





