நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுப்பேரவையின் முதல் கமிட்டி 81வது கூட்டத்தொடரில், பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அணு ஆயுத மிரட்டல்களால் இந்தியாவை அச்சுறுத்த முடியாது என இந்தியா தெரிவித்தது.
இந்த கூட்டத்தில், “ஆப்பரேஷன் சிந்தூர்” மற்றும் சிந்து நதி நீர் விவகாரம் உள்ளிட்டவற்றை முன்வைத்து பாகிஸ்தான் இந்தியா மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை வைத்தது. இதற்கு இளம் இந்தியத் தூதர் அன்மோல் ஷெர் சிங் பேடி பதிலளித்தார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மேற்கொண்ட “ஆப்பரேஷன் சிந்தூர்” நடவடிக்கை தற்காப்புக்காக எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். மேலும், நல்லெண்ணத்தின் அடிப்படையில் கையெழுத்திடப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் அடிப்படையை பாகிஸ்தான் சீர்குலைத்துவிட்டதாகவும், அதிலிருந்து கிடைக்கும் சலுகைகளை மட்டும் தொடர்ந்து கோர முடியாது என்றும் தெரிவித்தார்.
சிறிய நடவடிக்கைக்கும் அணு ஆயுதங்களை அரணாகக் காட்டுவது பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிக்கும் என அவர் எச்சரித்தார். பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி வழங்கப்படும் என்றும், பயங்கரவாதத்திற்கு நிதி அளிப்பவர்களுக்கும் அதை மூளையாக இயக்குபவர்களுக்கும் இந்தியா வேறுபாடு பார்க்காது என்றும் அவர் கூறினார்.





