சென்னை: தவெகவில் இணைவதாக பரவும் வதந்திகளை பாஜ நிர்வாகியும் நடிகையுமான கஸ்தூரி மறுத்துள்ளார். இதன் பின்னணியில் அரசியல் “வயிற்றெரிச்சல்” இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதள பதிவில், தன்னை “பாஜ பி டீம்” என சித்தரிக்கும் குற்றச்சாட்டுகளை தமிழக மக்கள் நம்பமாட்டார்கள் என்றும், இப்படிப் பரப்பப்படும் கதைகளின் அரசியல் நோக்கத்தை மக்கள் தெளிவாக உணர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

பிரதமர் மோடியின் மக்கள் பணியால் ஈர்க்கப்பட்டு தான் பொதுவாழ்வில் வந்ததாகவும், எப்போதும் தமிழக பாஜ மாநிலத் தலைமையே தன் வழிகாட்டி எனவும் கஸ்தூரி குறிப்பிட்டார். தன்னிடம் நம்பிக்கை வைத்து துணை நிற்கும் தலைமைக்கும் கட்சியினருக்கும் நன்றியும் தெரிவித்தார்.

சமீபத்தில் நடந்த ஒரு பொதுநிகழ்ச்சியில், மக்கள், கேமராக்கள், நிருபர்கள் நிறைந்த அரங்கில் அமைச்சர் சகோதரர் வெங்கட்ரமணனுடன் மரியாதையுடன் பேசிய உரையாடலையே வக்கிரமாக சித்தரிக்கிறார்கள் எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

அரசியலில் கொள்கை முரண்பாடுகள் இருக்கலாம்; ஆனால் தனிமனித விரோதத்தை தாம் ஆதரிப்பதில்லை என்றும், நாகரிகமான உரையாடலை தவறாக காட்டி ஜாதி, தொழில், பெண்மை உள்ளிட்டவற்றை இழிவுபடுத்தும் கீழ்த்தர அவதூறுகளுக்கு அஞ்சமாட்டேன் என்றும் கஸ்தூரி கூறினார்.