ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்ற உலக சுகாதார உச்சிமாநாட்டில், 35 நிபுணர்கள் கொண்ட குழு தயாரித்த தி லான்செட் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. தற்போதைய போக்குகள் மாற்றப்படாவிட்டால், 2100க்குள் மனித இனமே கடுமையான இருப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் அபாயம் இருப்பதாக அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையில் மொத்தம் 17 முக்கிய அச்சுறுத்தல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் செயற்கை நுண்ணறிவின் அதிவேக வளர்ச்சி, அணு ஆயுதப் போர் அபாயம், பருவநிலை மாற்றம், காற்று மாசுபாடு, நுண்ணுயிர் எதிர்ப்பு திறன் (antimicrobial resistance), குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

அணு ஆயுதப் போர் ஏற்பட்டால், அதனால் உருவாகும் புகை வளிமண்டலத்தை கடுமையாக பாதித்து சூரிய ஒளியைத் தடுக்கக்கூடும் என்றும், இதனால் உலகளாவிய வெப்பநிலை குறைந்து விவசாயம் பாதிக்கப்படலாம் என்றும் அறிக்கை கூறுகிறது. அதன் விளைவாக உலக அளவில் பேரழிவை ஏற்படுத்தும் பெரும் பஞ்சம் உருவாகும் அபாயம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஏஐ தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்பட்டால் மனித குலத்திற்கே எதிரானதாக மாறக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உயிரியல் ஆயுதங்களை உருவாக்குவதில் ஏஐ பயன்படுத்தப்படுவது உலகளாவிய பாதுகாப்புக்கு பெரிய ஆபத்தாகும் என அறிக்கை சுட்டுகிறது.

லான்செட் கமிஷனின் இணைத் தலைவர் கிறிஸ்டோபர் முர்ரே, தற்போதைய போக்கை கட்டுப்படுத்தாவிட்டால் 2100க்குள் மனிதர்களின் வாழ்நாள் குறையக்கூடும் என்று தெரிவித்தார். மக்களை அச்சுறுத்துவதற்காக அல்லாமல், உலகத் தலைவர்கள் உரிய நேரத்தில் ஒருங்கிணைந்த சர்வதேச நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்; மருத்துவ தொழில்நுட்ப முதலீடுகளையும் அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.