சென்னை ஐ.ஐ.டி.யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தின் வளர்ச்சியே முக்கியம் என்றும், தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளும் மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
அந்நிகழ்ச்சியில் தேசிய நெடுஞ்சாலை, துறைமுக உள்கட்டமைப்பு உள்ளிட்ட ரூ.13,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம், நாட்டிற்கு அர்ப்பணித்தல் மற்றும் அடிக்கல் நாட்டு விழாக்களாக நடைபெற்றன. இந்த திட்டங்கள் பொதுமக்களின் அன்றாடப் பயணத்தை வேகப்படுத்தும்; தொழில் மற்றும் வர்த்தகத்தை வலுப்படுத்தும்; தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என அவர் கூறினார்.
மேலும், சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள மூளை ஆராய்ச்சி மையத்தை பார்வையிட்டதாகவும், அந்த ஆய்வு பொதுச் சுகாதாரத் துறையில் புதிய வாய்ப்புகளை உருவாக்கக்கூடும் என்றும் குறிப்பிட்டார். சென்னை மெட்ரோ திட்டம் தொடர்பான அனுபவங்களையும், ஆலய தரிசனத்தையும் அவர் நினைவுகூரினார்.
மாநிலங்களின் வளர்ச்சியில்தான் நாட்டின் முன்னேற்றம் உள்ளது என்ற கருத்தை வலியுறுத்திய மோடி, முதல்வராக இருந்த கால அனுபவம் மாநிலங்களின் எதிர்பார்ப்புகளை புரிந்துகொள்ள உதவியதாக கூறினார். குஜராத் முதல்வராக இருந்தபோது கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட முன்னாள் முதல்வர்களுடன் உரையாடியதாகவும், பிரதமராகிய பின் ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி, மு.க.ஸ்டாலின் போன்ற தலைவர்களுடன் இணைந்து பணியாற்றியதாகவும் தெரிவித்தார்.
நகர்ப்புற மேம்பாட்டில் பொதுப் போக்குவரத்தின் பங்கு முக்கியம் என்றும், நகரமயமாக்கலை சவாலாக அல்ல வாய்ப்பாக பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார். 2014ல் ஐந்து நகரங்களில் மட்டுமே இருந்த மெட்ரோ சேவை தற்போது 25 நகரங்களுக்கு விரிந்துள்ளதாக குறிப்பிட்டு, சென்னை மெட்ரோ விரிவாக்கம் சாமானிய மக்கள், மாணவர்கள், மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு எளிதான பயணத்தை வழங்கும் என்றார்.





