2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க மாணவர்கள் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற ஜெயகோபால் கரோடியா ஹிந்து வித்யாலா பள்ளியின் 50ஆம் ஆண்டு பொன்விழாவில் அவர் பேசினார்; அங்கு பள்ளியின் ‘ஏஐ’ ஆய்வகத்தையும் அவர் திறந்து வைத்தார்.

இன்றைய இளைஞர்களின் புதிய சிந்தனைகள், தீர்வுகள் இந்தியாவிற்கும் உலகிற்கும் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வகையில் இருக்கும் என்றும், உலகம் தேடும் தீர்வுகளை வழங்கும் வல்லமை இந்திய இளைஞர்களிடம் இருப்பதாகவும் மோடி கூறினார். நாட்டில் அளவிட முடியாத வாய்ப்புகள் உள்ளன; அனைவரும் இணைந்து சாதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 1975ஆம் ஆண்டு மேற்கு மாம்பலத்தில் ஏழு மாணவர்களுடன் தொடங்கிய இந்த நிறுவனம், கல்வியுடன் தேசப்பக்தி கொண்ட குடிமக்களை உருவாக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வாழ்நாள் முழுவதும் புதிதாக கற்க விரும்புவோருக்கு திருக்குறள் சிறந்த வழிகாட்டி எனக் கூறிய மோடி, அதன் ரஷ்ய மொழிபெயர்ப்பை ரஷ்ய அதிபர் புடினுக்கு வழங்கியதை நினைவுகூர்ந்தார். மேலும் பாரதியாரின் ஆளுமை உருவாக காசி முக்கிய பங்களிப்பு செய்ததாகவும், ‘அச்சமில்லை’ என்ற அவரது செய்தி அச்சமின்றி வாழ ஊக்கமளிப்பதாகவும் அவர் கூறினார்.

மாணவர்கள் பெரிய கனவுகள் காண வேண்டும், வித்தியாசமாக சிந்திக்க வேண்டும், அச்சமின்றி வாழ வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இந்தியா முழுவதும் தமிழ் கலாசாரம், இலக்கியம், மரபுகள் ஆகியவற்றை எடுத்துச் செல்லவும், தமிழை பிறருடன் பகிரவும் கேட்டுக்கொண்டார். 2014க்குப் பிறகு பல்கலைக்கழகங்கள் அதிகரித்துள்ளன என்றும், புதிய கல்விக் கொள்கையால் கல்வித் தரம் உயர்ந்துள்ளதாகவும், உலகளாவிய தரவரிசைகளில் இந்திய பல்கலைகழகங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

சர்வதேச அளவில் விளையாட்டுத் துறையும் முக்கிய இடத்தைப் பெறுகிறது என்று கூறிய மோடி, 2030ல் காமன்வெல்த் போட்டிகளையும் 2036ல் ஒலிம்பிக் போட்டிகளையும் இந்தியா நடத்த உள்ளதாக தெரிவித்தார். 2047க்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்கவும், இந்தியாவை உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாக உயர்த்தவும் மாணவர்கள் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

விழாவில் தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர், மத்திய அமைச்சர் எல்.முருகன், விஸ்வ ஹிந்து வித்யா கேந்திரா தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜி, தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.