புதுடில்லி: டில்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான அனுமதியை இன்று முதல் நிறுத்துவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, அமைதியான முறையில் போராட்டங்கள் நடத்த ஜந்தர் மந்தர் முக்கிய இடமாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நகரின் மையப் பகுதியில் உள்ள பழைய பார்லி அலுவலக சாலையில் இந்த இடம் அமைந்துள்ளதால், போராட்ட நாட்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு, போராட்டங்களை நடத்த மாற்றாக 3 இடங்களை அமைச்சகம் தேர்வு செய்துள்ளது. அவை ராம்லீலா மைதானம், புராரி மைதானம் மற்றும் கிழக்கு டில்லியில் உள்ள சிபிடி மைதானம்.

இந்த புதிய இடங்களில் போராட்டம் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.