தென்னிந்தியாவில் இன்னும் மூன்று நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.

அக்.15 முதல் பருவமழை தொடங்குவதற்கு ஏற்ற சூழல் நிலவுவதாகவும், அடுத்த 2 அல்லது 3 நாட்களில் தென்மேற்கு பருவமழை காலம் விலகக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் அக்.15 முதல் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தெற்கு அந்தமான் கடல் பகுதியை ஒட்டிய வளிமண்டல சுழற்சி காரணமாக, அக்.13 அன்று தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக IMD தெரிவித்தது.

அக்.12 அன்று கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. அக்.13 அன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.