சென்னையில் நடைபெற்ற மாணவர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசியபோது, முன்னாள் முதல்வர் காமராஜர் அல்லது அவர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகள் குறித்து குறிப்பிடாதது தமிழக காங்கிரஸ் வட்டாரங்களில் சங்கடத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

தீவுத்திடலில் காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட “மாணவர்கள் குரல்” நிகழ்ச்சியில் ராகுல் பங்கேற்றார். முதல்வர் விஜயும் வருவார் என கூறப்பட்டதால் மாணவர்கள் பல மணி நேரம் காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் ராகுல் இரவு 7 மணியளவில் தாமதமாக வந்தார்; முதல்வர் விஜய் வரவில்லை.

முதல்வர் வரவில்லை என்பது உறுதியானதும் பல மாணவர்கள் வெளியேறத் தொடங்கியதால், ராகுல் வந்த நேரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு மாணவர் கூட்டம் இல்லை என கூறப்படுகிறது.

நிகழ்ச்சியில் ராகுல், “காங்கிரசை ஒழிக்க வேண்டும்” என பேசிய ஈ.வெ.ரா. (பெரியார்) குறித்து பாராட்டி பேசினார்; மாணவர்களிடமும் அவரைப் பற்றி பெருமையாக கூறினார். ஆனால் தமிழகத்தில் காங்கிரஸின் முக்கிய முகமாக கருதப்படும் காமராஜரை பற்றி ஒரு வார்த்தையும் பேசாதது கட்சியினரிடையே அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியதாக தகவல்.

இதற்கிடையில், நிகழ்ச்சியில் பங்கேற்ற மூத்த தலைவர் திருநாவுக்கரசர், அமைச்சர் ராஜேஷ்குமார், புதுச்சேரி முன்னாள் முதல்வர் வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் தூங்குவது போலத் தோன்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதைத் தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தொடர்பான ஆதரவாளர்கள் மற்றும் எதிர் கோஷ்டிகள் இடையே கருத்து மோதலும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.