சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், முதல்வர் விஜயின் “நாகரிக அரசியல்” அணுகுமுறையை மற்ற அரசியல் தலைவர்களும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். சமீபத்தில் நடைபெற்ற பொதுநிகழ்வுகளில் முதல்வர் எடுத்த நிலைப்பாடுகளையும் அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற நிகழ்வை சுட்டிக்காட்டிய ராஜ்மோகன், அந்த மேடையில் விஜய் தமிழக முதல்வராக செயல்பட்டு மாநிலத்தின் உரிமை மற்றும் கோரிக்கைகளை தெளிவாக முன்வைத்தார் என்றார். அதற்கு முந்தைய நாள் ராகுல் காந்தியுடன் விஜய் பேசிய நிகழ்வை, தவெக கட்சித் தலைவராக அவர் பங்கேற்ற “நட்பு அரசியல்” மேடையாகவும் அவர் விவரித்தார்.

அந்த உரைகளில் நதிநீர் இணைப்பு, வழக்காடு மொழியாக தமிழ் வேண்டும் என்ற கோரிக்கை, பள்ளிக்கல்விக்கான ₹5,000 கோடி நிதியை விடுவிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் உள்ளிட்டவை முன்வைக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மேடையையும் நாகரிக அரசியலாக முன்னெடுத்து வருகிறார் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், மக்கள் நலப் பணிகளில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளதாகவும், ஊழல் இல்லாததால் டெண்டர்கள் எடுக்கப்பட்டு பணிகள் வேகமாக நடைபெறுவதாகவும் அமைச்சர் கூறினார். இது தொடக்கமே; மேலும் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.