மும்பை: கச்சா எண்ணெய் கொள்முதல் உள்ளிட்ட சர்வதேச வர்த்தகங்களில் டாலரின் தேவை அதிகமாக இருப்பதால், இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து அழுத்தத்தை சந்தித்து வந்தது.
இந்த நிலையை கட்டுப்படுத்த, பொதுச் சந்தையில் டாலர் தேவை குறையும்படி ரிசர்வ் வங்கி புதிய நடைமுறையை கொண்டு வந்தது. அதன்படி, எண்ணெய் பொதுத்துறை நிறுவனங்கள் நேரடியாக ஆர்பிஐயிடமிருந்து டாலர்களைப் பெற முடியும்.
மேலும், ரூபாய் சார்ந்த அந்நியச் செலவாணி டெரிவேட்டிவ் ஒப்பந்தங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன. ரத்து செய்யப்பட்ட பின் மீண்டும் முன்பதிவு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டதுடன், குறிப்பிட்ட அந்நியச் செலவாணி ஒப்பந்தங்களுக்கு 20% ரொக்க இருப்பு கட்டாயமாக்கப்பட்டது.
இந்த நடவடிக்கைகளின் பின்னணியில், இன்று வர்த்தகத் தொடக்கத்தில் டாலருக்கு எதிராக ரூபாய் 94 பைசா உயர்ந்தது. இதனால், ஒரு டாலருக்கு ரூபாய் 96.72 இருந்து 95.77 ஆக வலுப்பெற்றது.
இதேபோன்ற ஆர்பிஐ நடவடிக்கைகள் தொடர்ந்தால், வரும் நாட்களில் ரூபாய் மதிப்பு மேலும் உயர வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.





