புதுடில்லி: ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவை இந்தியாவில் நுழைவதை வெறும் வணிக முன்னேற்றமாக மட்டும் பார்க்கக் கூடாது என தக் ஷஷிலா கல்வி நிறுவனம் எச்சரித்துள்ளது. இது நாட்டின் இறையாண்மை, தகவல் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான ஆழமான சவால்களை உருவாக்கக்கூடும் என அதன் ஆய்வு கூறுகிறது.
மணிப்பூரில் இனக் கலவர சூழலில் பாதுகாப்புப் படையினர் ஸ்டார்லிங்க் சாதனங்களை பறிமுதல் செய்த சம்பவத்தை நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியாவில் சேவை முடக்கப்பட்டதாக எலான் மஸ்க் கூறியிருந்தாலும், மியான்மர் எல்லையோரப் பகுதிகளில் ‘ஜியோ-பென்சிங்’ குறைபாடுகள் காரணமாக சில சாதனங்கள் செயல்பட்டிருக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தமான்–நிக்கோபார் தீவுகளில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஸ்டார்லிங்க் சாதனங்களை பயன்படுத்தியது கண்டறியப்பட்டதாகவும், அந்த டெர்மினல்களை பயன்படுத்தியவர்களின் விவரங்களை ஸ்டார்லிங்க் வழங்கவில்லை எனவும் ஆய்வு கூறுகிறது. வெளிநாட்டு உதாரணமாக, ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்களின்போது அரசு முழுமையாக இணையத்தை முடக்கிய நிலையிலும், சட்டவிரோதமாக கடத்தப்பட்டதாக கூறப்படும் சுமார் 50,000 ஸ்டார்லிங்க் டெர்மினல்களை ரேடியோ ஜாமர்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் கட்டுப்படுத்த முடியவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ரஷ்யாவுடன் நடந்த போரில் உக்ரைன் ராணுவ தகவல் தொடர்புக்கு ஸ்டார்லிங்க் முக்கிய ஆதாரமாக இருந்ததாகவும், கிரிமியா தொடர்பான தாக்குதல் நடவடிக்கையின்போது இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டதாகவும் ஆய்வு நினைவூட்டுகிறது. ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்பு தனியார் நிறுவனத் தலைவரின் முடிவுகளுக்கு சார்ந்திருப்பது ஆபத்தானது என கூறியுள்ள நிறுவனம், அமெரிக்க நிர்வாகம், ராணுவம் மற்றும் ‘நாசா’வுடன் எலான் மஸ்க் கொண்டுள்ள நெருக்கம் இந்திய நலன்களுக்கு முரண்பாடு ஏற்பட்டால் அழுத்தம் உருவாக்கக்கூடும் என்றும் எச்சரிக்கிறது.
பேரிடர் அல்லது எல்லைப் போர் போன்ற நெருக்கடிகளில் இந்திய ராணுவம் மற்றும் நிர்வாகம் இந்த இணைப்பை நம்பியிருக்கும் போது சேவை தன்னிச்சையாக நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடுப்பு அல்லது கலவர சூழலில் உள்நாட்டு பாதுகாப்புக்காக இணையத்தை முடக்க அரசு முயன்றாலும், அரசின் கட்டுப்பாட்டிற்கு வெளியே செயற்கைக்கோள் சிக்னல்கள் தொடர்ந்து இயங்கக்கூடும் என்றும் தக் ஷஷிலா எச்சரித்துள்ளது.





