புதுடில்லி: டில்லியில் நேற்று முன்தினம் மெட்ரோ உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் நேற்று வழிகாட்டுதல்களை வழங்கியது.

மெட்ரோ மற்றும் பிற ரயில் சேவைகள் வழக்கம்போல் இயக்கப்பட வேண்டும் என்றும், சட்டம்–ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வரை ரயில் உள்ளிட்ட போக்குவரத்தை முடக்கி வைக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. போக்குவரத்து விதிகளுக்கு உட்பட்டு நகருக்குள் பொதுமக்கள் தடையின்றி நடமாட அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியது.

சட்டம்–ஒழுங்கை கருதி சாலைகளில் அமைக்கப்பட்ட தடுப்புகளின் தேவையை போலீஸ் அதிகாரிகள் மீண்டும் ஆய்வு செய்து, தேவையில்லாத தடுப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது.

மேலும், சட்ட விதிகளின்படி இணைய சேவைகள் தடையின்றி தொடர வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. பி.என்.எஸ்.எஸ். பிரிவு 163-ன் கீழ் தடை உத்தரவுகள் அமலில் இல்லாத பகுதிகளில் அமைதியான முறையில் போராட்டங்களை அனுமதிக்க வேண்டும்; மற்றவர்களை வன்முறைக்கு தூண்டும் வகையில் போராட்டம் நடத்தக் கூடாது என்றும் வலியுறுத்தியது.

ஆட்கொணர்வு மனுக்கள் மற்றும் பெருமளவிலான தடுப்பு காவல்கள் தொடர்பான வழக்குகள் நாளை விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. சட்டத்திற்கு புறம்பாக யாரையும் தடுப்பு காவலில் வைக்கக் கூடாது; வழக்கறிஞர்கள் தொழில்முறை கடமைகளை ஆற்றுவதற்கு முட்டுக்கட்டை போடக் கூடாது என்றும் கூறிய நீதிமன்றம், கட்டுப்பாடுகள் உச்சத்தில் இருந்தபோது எந்தெந்த மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டிருந்தன என்பதை விளக்கும் வரைபடத்துடன் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.