ரஷ்யாவுடன் நீடிக்கும் போரை முடிவுக்கு கொண்டு வர ஒப்பந்தம் செய்ய உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தவறியுள்ளதாக கூறிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உக்ரைனில் புதிய அதிபரை தேர்வு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதாக தெரிவித்தார்.
உக்ரைன்–ரஷ்யா போர் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா, துருக்கி, இந்தியா உள்ளிட்ட நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஈரானுடன் நடைபெறும் போர் காரணமாக அமெரிக்காவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த சூழலில் ரஷ்யாவிடமிருந்து டீசல் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்ததாகவும், ரஷ்யாவின் எரிபொருள் ஏற்றுமதிக்கு இருந்த தடைகளை நீக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நடவடிக்கை போரை மேலும் பல ஆண்டுகள் நீடிக்க உதவும் என ஜெலன்ஸ்கி விமர்சித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், 2022ல் தான் அதிபராக இருந்திருந்தால் போர் தொடங்கியிருக்காது என கூறி, பெரும் இழப்புகள் மற்றும் இடம்பெயர்வுகளை சுட்டிக்காட்டி, உக்ரைன் மக்கள் புதிய தலைமையை தேர்வு செய்ய வேண்டும் என்றார்.
மேலும், போர் நடைபெறுவதற்கு ரஷ்யாவே காரணம் என ஜெலன்ஸ்கி கூறி, உக்ரைனின் எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல்களை ரஷ்யா நிறுத்தினால், ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது தாக்குதல்களை உக்ரைனும் நிறுத்தும் என்றும், போர் நிறுத்தம் பரஸ்பர ஒப்புதலுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.





