புதுடில்லி: உலகளவில் குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்படும் சிறுமியரில் மூன்றில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்ற அதிர்ச்சி தகவலை யுனிசெப் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை முன்வைத்துள்ளது. குறிப்பாக அதிக பாதிப்பு உள்ள மாநிலங்களில் தீவிரமான, குறிவைத்த நடவடிக்கைகள் தேவை என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்தியாவில் திருமணத்துக்கான குறைந்தபட்ச வயது பெண்களுக்கு 18, ஆண்களுக்கு 21 என சட்டம் நிர்ணயித்துள்ளது. இதனால் குழந்தைத் திருமணம் குறைந்தாலும், கிராமப்புறங்களில் சில பகுதிகளில் அது தொடர்கிறது. இதை ஒழிக்கும் நோக்கில் மத்திய அரசு 2024ல் “குழந்தைத் திருமணமில்லா இந்தியா” இயக்கத்தைத் தொடங்கி, 2030க்குள் முழுமையாக ஒழிப்பதை இலக்காக வைத்துள்ளது.

யுனிசெப் அறிக்கையின்படி, இந்தியாவில் 17 வயதுக்கு முன்பே திருமணம் செய்துகொண்ட சிறுமியர் எண்ணிக்கை 22 கோடிக்கும் அதிகம். இவர்களில் 15 வயதுக்கு முன்பே கட்டாயத் திருமணத்தில் தள்ளப்பட்டவர்கள் 9 கோடிக்கும் அதிகம். மேலும், இந்தியாவில் நடைபெறும் குழந்தைத் திருமணங்களில் பாதிக்கும் மேற்பட்டவை உத்தர பிரதேசம், பீஹார், மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் மட்டும் அதிகமாக நிகழ்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு மாறாக, கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் குழந்தைத் திருமணத்தைத் தடுக்கும் நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. யுனிசெப் இந்திய பிரதிநிதி சிந்தியா மெக்காப்ரி, பெண் குழந்தைகள் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வாழ அவர்களுக்கு திறன் வளர்ப்பு வாய்ப்புகள் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்றும், நடப்பிலுள்ள முயற்சிகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

சி.ஆர்.ஒய். அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி பூஜா மர்வாஹா, தேசிய சராசரியை மட்டும் பார்த்து திருப்தியடையாமல் மாநில அளவில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். குழந்தைத் திருமணம் சிறுமிகளின் கல்வி, வேலைவாய்ப்பு, உடல்நலம் ஆகியவற்றை பாதிப்பதுடன், மரியாதையுடன் வாழும் உரிமையையும் சிதைக்கும் என்பதால் சட்டப் பாதுகாப்பு ஒவ்வொரு குழந்தையையும் சென்றடைய மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்தனர். சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்ட பின்னணியில் இந்த அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.