புதுடில்லியில் வெளியிடப்பட்ட உத்தரவின் மூலம், தமிழகத்தின் முழுநேர கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரை ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்துள்ளார்.
தமிழக கவர்னராக இருந்த ஆர்.என். ரவி கடந்த மார்ச்சில் மேற்கு வங்க கவர்னராக நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, கேரள கவர்னராக இருந்த அர்லேக்கருக்கு தமிழக கவர்னர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அர்லேக்கரை கேரள கவர்னர் பொறுப்பிலிருந்து விடுவித்து, தமிழகத்தின் முழுநேர கவர்னராக நியமிக்கும் உத்தரவு நேற்று வெளியிடப்பட்டது. புதிய கவர்னர்கள் பதவியேற்கும் நாளிலிருந்து இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன், கேரளா, கர்நாடகா, உத்தரகண்ட், ஒடிஷா, சிக்கிம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கும் புதிய கவர்னர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சிக்கிம் கவர்னராக இருந்த ஓம் பிரகாஷ் மாத்தூர் கேரள கவர்னராகவும், கர்நாடக கவர்னராக டாக்டர் சுதா யாதவ், ஒடிஷா கவர்னராக பிரஜ் மோகன் ராம், உத்தரகண்ட் கவர்னராக டாக்டர் தல் சிங் பிசென், சிக்கிம் கவர்னராக துஷ்யந்த் கவுதம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடக கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் சுதா யாதவ் பா.ஜ.க. முன்னாள் எம்.பி. எனவும், இதன் மூலம் அந்த மாநிலத்தின் இரண்டாவது பெண் கவர்னராக அவர் அமைய உள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது. டாக்டர் தல் சிங் பிசென் பா.ஜ.க. முன்னாள் எம்.பி. என்றும், பிரஜ் மோகன் ராம் ஜார்க்கண்ட் மாநிலத்தின் பாலமு லோக்சபா தொகுதி முன்னாள் எம்.பி. என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துஷ்யந்த் கவுதம் பா.ஜ.க. முன்னாள் தேசிய பொதுச்செயலராகவும், முன்னாள் ராஜ்யசபா எம்.பி.யாகவும் இருந்துள்ளார்.





