புதுடில்லி: இந்தியாவின் அரசியலமைப்பு கட்டமைப்பையும் ஜனநாயக நிறுவனங்களையும் பலவீனப்படுத்த காங்கிரஸ் முயல்கிறது என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், போராட்டம் என்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை என்றாலும், அதிகாரிகளை அப்பட்டமாகத் திட்டுவது கண்டிக்கத்தக்கது என்று கூறினார். சமீப காலங்களில் காங்கிரஸ் கட்சி திசை மாறி சென்றுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.

மேலும், விடுமுறைகளை கொண்டாடுவதில் கவனம் செலுத்தாமல் அர்ப்பணிப்புடன் செயல்படும் தலைவர் இருந்தால்தான் கட்சி தன் பலத்தை உயர்த்த முடியும் என அவர் குறிப்பிட்டார். காங்கிரஸின் அடுத்த இலக்கு நீதித்துறையாக இருக்கும் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இந்தியாவுக்கு எதிரான குழுக்கள் ஒன்றிணைவதாகவும், அதற்கு பதிலாக தேசப்பற்றுள்ள இந்தியர்கள் அனைவரும் ஒன்றிணைவார்கள் என்றும் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.