டில்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் (CEC) ஞானேஷ்குமாருக்கு எதிராக ராகுல் காந்தி உள்ளிட்ட இண்டி கூட்டணி தலைவர்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் காங்கிரஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராகுல் காந்தியின் நடவடிக்கைகளில் இரட்டை நிலைப்பாடு இருப்பதாகவும், அரசியல் அமைப்பின் பல அம்சங்களை சீர்குலைக்கும் வகையில் குழந்தைத்தனமான அணுகுமுறை காணப்படுவதாகவும் கூறினார். தேர்தல் கமிஷன் சுதந்திரமாக செயல்பட தேஜ கூட்டணி அரசு முழு சுதந்திரம் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் ஆட்சிக்காலங்களில் தேர்தல் கமிஷனர்களுக்கு அரசியல் பதவிகள் வழங்கப்பட்டதாகவும், இது சட்ட விதிகளை மீறும் தவறு எனவும் கோயல் குற்றம்சாட்டினார். அவரது கூறுகையில், ஒரு முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனரை காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தியதும், மற்றொருவரை மத்திய அமைச்சரவையில் சேர்த்ததும், மேலும் இரண்டு முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர்களை கவர்னராக நியமித்ததும் இடம்பெற்றதாக கூறினார்.
மேலும், ஒரு தேர்தல் கமிஷனர் காங்கிரஸ் முகவரைப் போல செயல்பட்டதாக ஒரு முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் புகார் அளித்தபோதும், அவரை பதவி நீக்கம் செய்ய காங்கிரஸ் அரசு மறுத்ததாகவும் அவர் தெரிவித்தார். இதேபோல், டி.என். சேஷனை 1999ல் அத்வானிக்கு எதிராக போட்டியிட வைத்ததாகவும், 1996–2001 காலத்தில் தலைமை தேர்தல் கமிஷனராக இருந்த எம்.எஸ். கில்லுக்கு 2000ஆம் ஆண்டு பத்ம விபூஷண் வழங்கப்பட்டதை அவர் “லஞ்சம்” எனவும் விமர்சித்தார்.





