திருப்பூரில் வெளியிட்ட அறிக்கையில், போலீசாரின் நடவடிக்கை “ஒருதலைபட்சமாக” இருப்பதாக ஹிந்து முன்னணி குற்றம்சாட்டியுள்ளது. மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

திருப்பரங்குன்றத்தில் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை ஏற்று, அதற்கான ஏற்பாடுகளை செய்ய வலியுறுத்தி மாவட்டங்களில் ஹிந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதாக அவர் தெரிவித்தார். அந்த ஆர்ப்பாட்டங்களில் நான்கு இடங்களில் பேசிய பொறுப்பாளர்களை போலீசார் கைது செய்ததாகவும் கூறினார்.

மேலும், பிரதமர் மற்றும் முதல்வரின் சென்னை நிகழ்ச்சிகளை கருத்தில் கொண்டு கடந்த 4ம் தேதி சென்னையில் 19 இடங்களில் அறப்போராட்டம் நடத்தப்பட்டதாகவும், அவசரமாக வழக்கு பதிவு செய்து நான்கு பேரை கைது செய்ததை கண்டிப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாரத தேசத்தையும் ஹிந்து நம்பிக்கைகளையும் இழிவுபடுத்தி பேசியவர்கள் மீது புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார். ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள் மீது நள்ளிரவில் வழக்கு பதிவு செய்து அதிகாலையில் கைது செய்ததன் நோக்கம் என்ன என கேள்வி எழுப்பிய அவர், கைது செய்யப்பட்ட பொறுப்பாளர்களை விடுதலை செய்து வழக்குகளை வாபஸ் பெற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.