ஓமன் அருகே ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் இந்திய மாலுமிகள் பணியாற்றிய இரண்டு வணிகக் கப்பல்கள் அடுத்தடுத்து தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி, அந்தப் பகுதியில் கடற்பாதுகாப்பு குறித்த கவலை அதிகரித்துள்ளது.
நிகரகுவா கொடியுடன் இயங்கும் ‘எம்.டி. பெட்ரோ டால்பின்’ என்ற எண்ணெய்க் கப்பல் ஓமனின் சோஹர் துறைமுகப் பகுதியில் நின்றிருந்த போது, வான்வழி ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அந்தக் கப்பலில் 11 இந்திய மாலுமிகள் இருந்தனர்.
மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் சர்பானந்தா சோனேவால், இரண்டு கப்பல்களிலிருந்தும் மொத்தம் 20 இந்திய மாலுமிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தெரிவித்தார். ஆனால் பீர் பகதூர் யாதவ் மற்றும் அமித் சிங் ஆகிய இருவர் மாயமாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மார்ஷல் தீவுகள் கொடியுடன் சென்ற ‘எம்.டி. வால்தேரா’ என்ற எண்ணெய்க் கப்பல் மீது அடையாளம் தெரியாத பொருள் தாக்கியதால் தீ விபத்து ஏற்பட்டதாகவும், அதில் பணியாற்றிய 11 இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், வணிகக் கப்பல்கள் மற்றும் மாலுமிகள் மீது தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு பன்னாட்டு நீர்வழிகளில் தடையற்ற கடல்வழி வர்த்தகமும், கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது. கடந்த வாரமும் ஓமன் கடற்பகுதியில் நடந்த தாக்குதலில் 11 இந்திய மாலுமிகள் காயமடைந்த நிலையில், மீண்டும் தாக்குதல் நடந்தது சர்வதேச கடற்பாதுகாப்பு குறித்த அச்சத்தை எழுப்பியுள்ளது.





