நடப்பாண்டில் போதிய மழையில்லாமல் வறட்சி நிலவுவதால், தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள 11 டி.எம்.சி. காவிரி நீரை விடுவிப்பது கடினம் என கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தங்களின் சொந்த தேவைகளுக்கே தண்ணீர் பற்றாக்குறை இருப்பதாகவும் கர்நாடகா கூறியது.
தமிழக டெல்டா பகுதிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக காவிரி இருப்பதால், குறைவாக உள்ள நீரை உடனடியாக விடுவிக்கக் கோரி தமிழக அரசு இடையீட்டு மனு தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி. நீரை தமிழகத்திற்கு கர்நாடகா விடுவிக்க வேண்டும்.
இந்த மனு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் ஆப்ரேஷ் குமார் சிங் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில், தமிழக அரசு ஒவ்வொரு முறையும் நீர் பற்றாக்குறை இருப்பதாக கூறும் நிலையில், உத்தரவிட்டதை விட அதிகமாக நீர் திறந்ததாக கர்நாடகா தரவுகளை சமர்ப்பிப்பதாக நீதிபதி விக்ரம் நாத் குறிப்பிட்டு, இதற்கான விளக்கம் தேவை என்றார்.
தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, காவிரி ஆணையம் நிகழ்காலத் தரவுகளின் அடிப்படையில் மட்டுமே உத்தரவிடுவதாகவும், முந்தைய பற்றாக்குறை நீரை வழங்குவது குறித்து உத்தரவு வராததாகவும் வாதிட்டார். பற்றாக்குறை காலங்களிலும் அணைகளில் உள்ள நீரின் அடிப்படையில் விகிதாச்சார முறையில் பங்கீடு செய்யவும், பற்றாக்குறை நீரையும் கணக்கில் எடுத்துக்கொள்ள ஆணையத்திற்கு நீதிமன்றம் அறிவுறுத்தவும் வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
கர்நாடகா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், மழை குறைவால் பல பகுதிகளில் வறட்சி நிலவுவதால் குடிநீர் விநியோகம் பாதிக்காத வகையில் நீரைச் சேமிக்க வேண்டிய நிலை இருப்பதாக கூறினார். இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.





