சென்னை: வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு விசாரணையின் போது, “கவர்னரின் அதிகாரங்கள் குறித்து திமுக எப்போதிலிருந்து பேசத் தொடங்கியது?” என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மாநிலம் முழுவதும் பல தனியார் பள்ளி நிர்வாகிகளிடம், நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்றுத் தருவதாக கூறி கோடிக்கணக்கில் பணம் வசூலித்து மோசடி செய்ததாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் திமுக செய்தித் தொடர்பு குழு துணைத் தலைவரும், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத் தலைவருமான பி.டி. அரசகுமார், முன்னாள் அமைச்சர் மகேஷ் உள்ளிட்டோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் மகேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன் மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மகேஷ் தரப்பில், “கவர்னரின் ஒப்புதல் இல்லாமல், அரசு துறை செயலரின் அனுமதி பெற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று வாதிடப்பட்டது. இதற்கு நீதிபதி, கவர்னர் பதவியை “ஆட்டின் தாடி” என ஒப்பிட்டு தேவையற்றது என்று கூறியிருந்த நிலையில், இப்போது கவர்னர் அதிகாரங்களை திமுக எப்போதிலிருந்து முன்வைக்கிறது என கேள்வி எழுப்பினார்.

மேலும் முன்ஜாமின் மனு எப்போது தாக்கல் செய்யப்படும் என்றும் நீதிமன்றம் கேட்டது. இன்று மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும், ரத்து மனு விசாரணையையும் ஒத்திவைக்க வேண்டும் என்றும் மகேஷ் தரப்பு கோரியது. அதை ஏற்று, வழக்கை வரும் அக்டோபர் 29-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.