பாகிஸ்தான் சார்ந்த பயங்கரவாதி ஷாசாத் பட்டியின் கூட்டாளிகள் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் அங்கு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணை அதிகாரிகள் கூறுகையில், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த ஷாசாத் பட்டி பின்னர் பயங்கரவாத பாதைக்கு மாறி, ‘எஸ்.பி.என்.’ என குறிப்பிடப்படும் வலையமைப்பை உருவாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த வலையமைப்பு இந்திய இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாத செயல்களுக்கு தயார் செய்வதாக சந்தேகிக்கப்படுகிறது.

இந்த வழக்கில், கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி தஞ்சாவூரில் பதுங்கியிருந்ததாக கூறப்படும் எஸ்.பி.என். தொடர்புடைய உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயது மக்சூத் அலி என்பவர் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தஞ்சாவூரில் யாசர் அப்துல் (45) உள்ளிட்ட மேலும் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், ஈரோடு மற்றும் திருப்பூரில் இருப்பதாக கூறப்படும் மற்ற கூட்டாளிகளை கண்டறிய என்.ஐ.ஏ. நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள் மற்றும் பாதுகாப்புத் துறை அலுவலகங்களை குறிவைத்து சதித் திட்டங்கள் தீட்டப்பட்டதாகவும், காஸ் சிலிண்டர்களை காரில் எடுத்துச் சென்று காவல் நிலையங்களில் மோதித் தாக்குதல் நடத்த தயாராக இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.