டில்லியில் நடைபெற்ற இண்டி கூட்டணி பேரணியில், நெருக்கமாக வந்த ஒருவரை காங்கிரஸ் எம்பியும் எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி முழங்கையால் தள்ளியதாகக் கூறப்படும் வீடியோ வெளியாகி, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் தலைமையில் இண்டி கூட்டணி கட்சிகள் சுப்ரீம்கோர்ட் நோக்கி பேரணி நடத்தின. தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும், வாக்காளர் பட்டியல் “சிறப்பு தீவிர திருத்தம்” மற்றும் வாக்குத் திருட்டு புகார்கள் தொடர்பாக சுதந்திர விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள், எம்.பி.க்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.
வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், பாஜ அதை பகிர்ந்து ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்தது. தொடர்ந்து தோல்விகள் ஏற்பட்டதாகக் கூறி, இப்போது அவர் தனது சொந்தக் கட்சித் தொண்டர்கள்மீதே கோபமாகப் பாய்கிறார் என பாஜ பதிவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.





