சென்னை: தமிழகத்தின் மின் தேவையை பூர்த்தி செய்ய, மின் வாரியம் யூனிட் ரூ.37 வரை விலையில் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்த விலையில் மின்சாரம் வாங்கப்படுவது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.
மின் வாரியத்தின் சொந்த மின் நிலையங்களில் இருந்து கிடைக்கும் உற்பத்தி போதாததால், மத்திய அரசின் மின் நிலையங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் கோரப்பட்ட டெண்டரின் அடிப்படையில், அக்.13 முதல் அக்.31 வரை மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. 24 மணி நேரமும் வழங்கப்படும் மின்சாரத்திற்கு ஐந்து நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு, யூனிட் ரூ.31.99 முதல் ரூ.34.49 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 3,000 மெகாவாட் வாங்க டெண்டர் கோரப்பட்ட நிலையில், 2,001 மெகாவாட் மட்டுமே கிடைத்ததாக கூறப்படுகிறது. இந்த உச்ச நேர மின்சாரம் யூனிட் ரூ.33.37 முதல் ரூ.37 வரை வாங்கப்பட உள்ளது.
நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக டெண்டரில் அனல் மின்சாரம் கிடைக்கவில்லை; அதனால் எரிவாயு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட உள்ளதாக ஒரு அதிகாரி விளக்கினார். விலை அதிகமாக இருப்பதால், அவசியம் ஏற்பட்டால் மட்டுமே இந்த ஒப்பந்த மின்சாரம் பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.





