கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தை (டிஎன்ஏயூ) சேர்ந்த நான்கு பேராசிரியர்கள், உலகின் தலைசிறந்த 2 சதவீத விஞ்ஞானிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த பட்டியலை அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் எல்சிவியர் ஆய்விதழ் நிறுவனம் இணைந்து ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. உலகளவில் ஆய்வுத் தாக்கம் மற்றும் மேற்கோள் பெறும் அளவை அடிப்படையாகக் கொண்டு விஞ்ஞானிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

ஆய்வுக் கட்டுரைகளுக்குக் கிடைத்த மேற்கோள்கள், எச்-இண்டெக்ஸ், எச்.எம்.-இண்டெக்ஸ் உள்ளிட்ட பல்வேறு அளவீடுகள் கணக்கில் எடுக்கப்படுகின்றன. நடப்பாண்டு பட்டியலில் 20 அறிவியல் துறைகள் மற்றும் 174 துணைத் துறைகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இடம்பெற்றுள்ளனர்.

டிஎன்ஏயூ சார்பில் இடம் பெற்றவர்கள்: துணைவேந்தர் (பொறுப்பு) ரவீந்திரன், முன்னாள் ஆராய்ச்சி இயக்குநர் சுப்ரமணியன், வேளாண் நுண்ணுயிரியல் துறைத் தலைவர் சிவகுமார், வேளாண் பயிர் வினையியல் துறை பேராசிரியர் ஜனகிராமன்.

கடந்த ஆண்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரண்டு பேர் தேர்வான நிலையில், இந்த ஆண்டு நான்கு பேர் இடம் பெற்றிருப்பது பல்கலையின் ஆராய்ச்சி தரம் மேம்பட்டுள்ளதைக் காட்டுகிறது என வேளாண் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.