மும்பை: மஹாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை (FDA) ஆணையர் பொறுப்பில் இருந்து தன்னை இடமாற்றம் செய்யவில்லை என்று மூத்த ஐஏஎஸ் அதிகாரி துக்காராம் முண்டே தெரிவித்துள்ளார். தன்னை மாற்றியமைத்ததாக வெளியான தகவல்களுக்கு அவர் இவ்வாறு விளக்கம் அளித்தார்.
மஹாராஷ்டிர அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை மறுசீரமைப்பதற்காக அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் செயலாளராக முண்டே நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் உணவு பாதுகாப்பு பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டதாக பேசப்பட்டது.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், தாம் தொடர்ந்து FDA ஆணையராகவே பணியாற்றி வருவதாகவும், கலப்படமான உணவு மற்றும் தரமற்ற மருந்துகளுக்கு எதிரான துறையின் நடவடிக்கை தொடர்ந்துகொண்டே இருப்பதாகவும் அவர் கூறினார்.
2005 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான முண்டே, 21 ஆண்டுக் கால பணிக்காலத்தில் 25 முறைக்கும் மேலாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இடமாற்றங்கள் இருந்தாலும் சமரசமற்ற நடவடிக்கை தொடரும் எனவும் அவர் உறுதி தெரிவித்தார்.





