சென்னை: முதல்வர் விஜய் நடித்த திரைப்படங்களை ஹிந்தியில் டப்பிங் செய்து வடமாநில தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்புவதன் மூலம் ரசிகர் ஆதரவை விரிவுபடுத்த தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) புதிய முயற்சியை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டசபை தேர்தல் காலத்தில் சமூக வலைதள பிரசாரத்தை அதிகப்படுத்தியதன் மூலம் பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் மத்தியில் விஜய்க்கான ஆதரவு உயர்ந்ததாகவும், அதன் தொடர்ச்சியாக த.வெ.க. 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்து, விஜய் முதல்வராக பொறுப்பேற்றதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தைத் தாண்டி விஜயின் அரசியல் செல்வாக்கை உயர்த்தும் வியூகமும் த.வெ.க. தரப்பில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக வடமாநிலங்களில் சமூக வலைதளங்களில் பிரபலமாக உள்ள 500 பேரின் பட்டியல் தயாரித்து, அவர்கள் மூலம் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களை வடமாநிலங்களில் பரவலாக விளம்பரப்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் பிரசாரத்துடன் சேர்த்து, திரைப்படங்கள் வழியாகவும் வடமாநில பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் மத்தியில் விஜய்க்கான ஆதரவை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திருப்பாச்சி, மதுர, துப்பாக்கி, கத்தி, சர்க்கார், கோட், ஜனநாயகன் உள்ளிட்ட சுமார் 10 படங்களை ஹிந்தி மட்டுமின்றி பிற மாநில மொழிகளிலும் வெளியிட முயற்சிகள் நடந்து வருவதாகவும், இதற்காக தயாரிப்பு மற்றும் வெளியீட்டு உரிமை கொண்ட நிறுவனங்களுடன் த.வெ.க. தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.





