புதுடில்லி: ரூ.2,000க்கு மேற்பட்ட யுபிஐ (UPI) வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கும் நடைமுறையை தீபாவளி பண்டிகைக்குப் பிறகு அமல்படுத்த முடிவு செய்துள்ளதாக தேசிய பணப் பரிவர்த்தனை நிறுவனம் (என்பிசிஐ) அறிவித்துள்ளது.
இதற்கு முன், ரூ.2,000க்கு மேல் நடைபெறும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணத்தை வணிகர்களிடமிருந்து வசூலிக்க மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இந்த புதிய கட்டண முறை அக்டோபர் 15 முதல் அமலுக்கு வரும் என என்பிசிஐ தெரிவித்திருந்தது.
அக்டோபர் முதல் டிசம்பர் வரை தசரா, தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகள் தொடர்ச்சியாக வருவதால், புதிய கட்டண முறையால் பண்டிகை கால விற்பனை பாதிக்கலாம் என வணிகர்கள் கவலை தெரிவித்தனர். இதனால், நடைமுறையை சில மாதங்கள் ஒத்திவைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு ரூ.2,000க்கு மேல் யுபிஐ மூலம் நடைபெறும் வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கும் நடைமுறை தீபாவளிக்குப் பிறகு அமல்படுத்தப்படும் என என்பிசிஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.





