கிருஷ்ணா நீர் பகிர்வு மற்றும் நதிநீர் இணைப்பு திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தமிழக முதல்வர் விஜய் இன்று ஆந்திரப் பிரதேசம் செல்கிறார். தமிழகத்திற்கு ஒப்பந்தப்படி நீர் திறப்பு முறைப்படியாக நடைபெறவில்லை என்ற பின்னணியில் இந்தப் பயணம் நடைபெறுகிறது.
கண்டலேறு அணையிலிருந்து ஆண்டுதோறும் 11 டி.எம்.சி. கிருஷ்ணா நீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்பது ஏற்பாடு. ஆனால் அந்த நீர் முறைப்படி கிடைப்பதில்லை என கூறப்படுகிறது. இதே நேரத்தில், கிருஷ்ணா கால்வாய் பராமரிப்பு கட்டணமாக ஆண்டுதோறும் ரூ.100 கோடி ஆந்திராவின் நீர்வளத்துறைக்கு தமிழக அரசு வழங்கி வருகிறது.
இந்நிலையில், தமிழகத்திற்கு நீரை காலமுறைப்படி மற்றும் தொடர்ச்சியாக திறக்க வலியுறுத்தி, ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடுவை முதல்வர் விஜய் மாலை 4.15 மணிக்கு விஜயவாடாவில் நேரில் சந்திக்கிறார். நதிகள் இணைப்பு திட்டம் குறித்தும் அவர் வலியுறுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயணத்தில் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், தலைமைச் செயலர் சாய்குமார், நீர்வளத்துறை செயலர் பிரசாந்த் வடநேரே உள்ளிட்டோர் உடன் செல்கிறார்கள்; கன்னாவரம் விமான நிலையத்திற்கு தனி விமானத்தில் பயணம் மேற்கொள்கிறார்.
சந்திப்புக்குப் பிறகு, விஜயவாடாவில் உள்ள கனக துர்க்கை அம்மன் கோவிலில் மாலை 6 மணிக்கு வழிபாடு நடத்துகிறார். பின்னர் துணை முதல்வர் பவன் கல்யாணை சந்தித்து, இரவு 8 மணிக்கு சென்னை திரும்புகிறார்.
இதற்கிடையில், வரும் 16ம் தேதி கோவை மாவட்டத்திற்கு செல்லும் முதல்வர் விஜய், ரூ.300 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நூலகக் கட்டடத்தை திறந்து வைத்து மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளார்.





