பீஹாரில் ஹாஜிபூர் பகுதியில் கங்கை ஆற்றில் நடந்த படகு விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

முதற்கட்ட தகவலின்படி, அந்த படகில் 15 முதல் 20 பேர் வரை பயணித்திருக்கலாம். அவர்களில் பெரும்பாலோர் சிறுவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. துக்க நிகழ்வில் கலந்து கொண்டு படகு மூலம் சொந்த ஊருக்கு திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஆற்றின் நடுப்பகுதியில் படகு திடீரென கவிழ்ந்ததால் பயணிகள் அனைவரும் நீரில் விழுந்தனர். சிலர் மூழ்கி உயிரிழந்த நிலையில், இன்னும் சிலரை தேடும் பணி நடைபெறுவதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

போலீசார், மாநில பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மீட்புப் பணிகளை மாநில அரசு துரிதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.