ஐரோப்பிய தலைவர்களை குறிவைத்து இணைய வழியில் திட்டமிட்ட தாக்குதல்கள் நடக்கின்றன என்றும், அதில் தொழிலதிபர் எலான் மஸ்க் பங்கு வகிக்கிறார் என்றும் பிரான்ஸ் அரசு பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் உள்நாட்டு அரசியலில் அந்நிய தலையீட்டுக்கு வழிவகுக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீன் நோயல் பரோட் கூறுகையில், மஸ்க் தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தின் மூலம் ஐரோப்பிய தலைவர்களுக்கு எதிராக அவதூறு பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தார். இதன் மூலம் ஐரோப்பிய நாடுகளின் உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது என்றார்.

ஜெர்மனியில் ஏ.எப்.டி. கட்சிக்கு ஆதரவாக கருத்து பதிவிடுவது, பிரிட்டன் தொடர்பான விவகாரங்களில் தீவிரமான கருத்துகளை பரப்புவது போன்றவை மஸ்க்கின் தொடர்ச்சியான போக்காக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிரான்சில் 2027 ஏப்ரல்–மே மாதங்களில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மதச்சார்பின்மை, இஸ்ரேல்–பாலஸ்தீன மோதல் போன்ற நுணுக்கமான விவகாரங்களை முன்வைத்து வெறுப்புணர்வை தூண்டி தேர்தலில் தலையிட சதி நடக்கலாம் என பரோட் எச்சரித்தார்.

மேலும், பிரான்சில் பள்ளி மாணவர்கள் நடத்தும் போராட்டத்தை மையமாக வைத்து ரஷ்யா, சீனா, ஈரான் மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆதரவாளர்கள் தரப்பிலிருந்து பல்வேறு அவதூறு பிரசாரங்கள் இணையத்தில் பரப்பப்படுவதாகவும் கூறினார். எந்த நாடாக இருந்தாலும், எங்கிருந்து வந்தாலும், பிரான்ஸ் உள்நாட்டு விவகாரங்களில் அந்நிய சக்திகள் தலையிடுவதை பொறுக்க முடியாது; இது நாட்டின் இறையாண்மையைச் சார்ந்த விஷயம் எனவும் அவர் வலியுறுத்தினார்.