போக்சோ வழக்கில் துாக்கு தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்தவ பாதிரியார் மேல்முறையீடு செய்ய வழக்கறிஞரை நியமித்துள்ளாரா என்பதை சிறை ஆவண பதிவுகள் மூலம் சரிபார்க்குமாறு மதுரை உயர்நீதிமன்றக் கிளை சிறைத்துறை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.
திருநெல்வேலி மாவட்டம் மேல இலந்தகுளத்தைச் சேர்ந்த ஆபிரகாம் (47) மீது, 2022ஆம் ஆண்டு ஊழியத்துக்காக அழைத்துச் செல்லப்பட்ட 4 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுமிகளும் அடங்குவர். தேவர்குளம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றம் ஆகஸ்ட் 19 அன்று அரசு தரப்பு குற்றச்சாட்டை நிரூபித்துள்ளதாகக் கூறி ஆபிரகாமுக்கு துாக்கு தண்டனை விதித்தது. மேலும் பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளுக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு தமிழக அரசு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
கீழமை நீதிமன்றம் துாக்கு தண்டனை விதித்தால், அது தொடர்பான ஆவணங்கள் உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும் நடைமுறையின்படி இவ்வழக்கும் அனுப்பப்பட்டது. நீதிபதிகள் எம். நிர்மல்குமார், என். குணசேகரன் அமர்வு விசாரித்தது; திருநெல்வேலி மத்திய சிறையிலிருந்து ஆபிரகாம் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
மேல்முறையீடு செய்ய உள்ளாரா, வழக்கறிஞரை நியமித்துள்ளாரா அல்லது இலவச சட்ட உதவி மூலம் வழக்கறிஞரை நியமிக்க வேண்டுமா என நீதிபதிகள் கேட்டனர். ஆபிரகாம், ஒருவர் வழக்கறிஞராக ஆஜராகப் போவதாகக் கூறி வக்காலத்தில் கையெழுத்து வாங்கிச் சென்றதாக தெரிவித்தார்; கைது தொடர்பாகவும் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதையடுத்து, வழக்கறிஞர் நியமனம் தொடர்பான சிறை பதிவுகளை ஆய்வு செய்து அக்டோபர் 16 அன்று சிறைத்துறை தரப்பில் தெரிவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.





