அதிமுகவைச் சேர்ந்த ஆறு எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்களை சட்டசபை சபாநாயகர் பிரபாகர் ஏற்றுக் கொண்டது அரசியல் சட்டப்படி செல்லுபடியாகும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
த.வெ.க. அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பான தகுதி நீக்க நடவடிக்கைகள் நிலுவையில் இருந்த நிலையில், மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயகுமார், தாராபுரம் சத்தியபாமா, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் விராலிமலை சி. விஜயபாஸ்கர் ஆகியோரின் ராஜினாமாக்களை சபாநாயகர் ஏற்று, தொகுதிகள் காலியானதாக அறிவித்திருந்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல். ரவி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்து தீர்ப்பை வழங்கியது.
எம்.எல்.ஏ. ஒருவர் எந்த காரணத்திற்காக வேண்டுமானாலும் பதவியை ராஜினாமா செய்யலாம்; அது அவர்களின் தனிப்பட்ட உரிமை என நீதிமன்றம் குறிப்பிட்டது. ராஜினாமாவின் பின்னணி உள்நோக்கங்களைப் பற்றி ஆழமான விசாரணை நடத்த வேண்டிய கட்டாயம் சபாநாயகருக்கு இல்லை என்றும், நேரில் அளிக்கப்பட்டதா, சுய விருப்பத்தின்படி அளிக்கப்பட்டதா என்பதையே அவர் பரிசீலிக்க முடியும் என்றும் தெரிவித்தது.
தகுதி நீக்க நடவடிக்கைகள் தொடர்பாக, எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் சி. விஜயபாஸ்கர் மீது இருந்த புகார்களை அதிமுக திரும்ப பெற்றதால், அவர்களுக்கு எதிரான நடவடிக்கை நிலுவையில் இல்லை என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. ஆனால் மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயகுமார் மற்றும் இசக்கி சுப்பையா ஆகிய நால்வருக்கு எதிரான தகுதி நீக்க விசாரணையை விரைந்து எடுத்துச் செய்து, இரண்டு மாதங்களில் முடிக்க வேண்டும் என்றும், எந்த எம்.எல்.ஏ.வும் விசாரணையை தாமதப்படுத்த சபாநாயகர் அனுமதிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது.





