மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் பார்லிமென்ட் விவகாரத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், தனது மத்திய அமைச்சர் பதவியிலிருந்தும் ராஜ்யசபா உறுப்பினர் பதவியிலிருந்தும் விலக விருப்பம் தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். சார்ந்த மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) வழியாக பா.ஜ.வில் செயல்படத் தொடங்கிய முருகன், 2017ஆம் ஆண்டு தேசிய பட்டியலின ஆணையத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் தமிழக அரசியலில் தேர்தல் களத்தில் இறங்கினார்.

2021 சட்டசபைத் தேர்தலில் தாராபுரம் தொகுதியில் தோல்வியடைந்த அவர், 2021 ஜூலை 7ஆம் தேதி மத்திய இணை அமைச்சராகப் பொறுப்பேற்றார். 2024 மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தாலும், அவருக்கு மீண்டும் இணை அமைச்சர் பதவி தொடர்ந்தது.

இந்த திடீர் ராஜினாமா முடிவின் பின்னணி குறித்து அரசியல் வட்டாரங்களில் மாறுபட்ட பார்வைகள் நிலவுகின்றன. ஒரு தரப்பு, அவரை மீண்டும் பா.ஜ. தமிழக மாநிலத் தலைவராக பரிசீலிக்க வாய்ப்பு இருக்கலாம் எனக் கூறுகிறது. மற்றொரு தரப்பு, கட்சி தலைமையின் முடிவின்படியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், மாநிலத் தலைவர் பதவிக்கு மீண்டும் வர வாய்ப்பு குறைவு என்றும் தெரிவிக்கிறது.

ராஜினாமா கடிதம் அளித்த பின்னர் பேட்டியளித்த எல்.முருகன், தமிழகத்திலிருந்து மக்களவைத் தேர்தல் வழியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லிக்கு வர விரும்புகிறேன் என்று கூறினார்.