மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றி அமைக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், உங்கள் தலைமையின் கீழ் இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பணியாற்றியது தனது வாழ்க்கையின் மிகப்பெரிய கவுரவம் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அரசியல் பின்னணி இல்லாத ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும், தினக்கூலித் தொழிலாளர்களாகவும் கால்நடை மேய்ப்பவர்களாகவும் பணியாற்றிய பெற்றோர் இன்னும் கோனூர் கிராமத்தில் எளிமையாக வாழ்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் பதவி முதல், இருமுறை ராஜ்யசபா உறுப்பினர் ஆகவும், அமைச்சரவையில் பணியாற்றியதுவரை தமக்கு வழங்கப்பட்ட பொறுப்புகள் அனைத்தும் பிரதமரின் நம்பிக்கையின் வெளிப்பாடு என முருகன் கூறியுள்ளார். தகவல் மற்றும் ஒலிபரப்பு, பார்லிமென்ட் விவகாரங்கள், மீன்வளம், கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட அமைச்சகங்களில் பணியாற்றிய அனுபவம் நாட்டையும் மக்களையும் புரிந்துகொள்ள உதவியதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்தும் பணியில் முழுநேரமாக ஈடுபட விரும்புவதால், மத்திய இணை அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவிக்கவும், ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்ய அனுமதிக்கவும் கேட்டுக்கொண்டுள்ளார். கிராமம் கிராமமாகவும் தெரு தெருவாகவும் சென்று மக்களைச் சந்தித்து, தொண்டர்களுடன் இணைந்து மாநிலம் முழுவதும் கட்சியின் இருப்பை விரிவுபடுத்தவும், 2029 லோக்சபா தேர்தலுக்கான தயாரிப்பில் தனது நேரமும் ஆற்றலும் முழுவதையும் அர்ப்பணிக்கவும் விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.





