அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அக்.17 அன்று இந்தியா வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 நாள் பயணமாக வரும் அவர், மும்பை, ஜாம்நகர் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது அவரது இரண்டாவது இந்தியப் பயணம்.
இந்தப் பயணத்தின் போது, மூத்த அதிகாரிகளை சந்தித்து இந்தியா–அமெரிக்கா இடையேயான ராஜதந்திர உறவுகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். உலக மற்றும் பிராந்திய அளவில் நிலவும் முக்கிய விவகாரங்களும், எரிசக்தி தொடர்பான விஷயங்களும் பேச்சுவார்த்தையில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொழில் அதிபர்களையும் சந்தித்து, வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து உரையாட உள்ளார்.
ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் வாங்கும் இந்தியா மீது அமெரிக்கா 100 சதவீதம் வரி விதித்துள்ள சூழலில் இந்தப் பயணம் நடைபெறுகிறது. இருநாடுகளுக்கிடையேயான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள நிலையில், ரூபியோவின் வருகை அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.





