சர்வதேச கடல் வழிப்பாதையான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் சரக்கு கப்பல்களிடம் கட்டணம் அல்லது சுங்க வரி வசூலிக்க ஈரான் முயல்வதாக கூறப்படும் நடவடிக்கைக்கு எதிராக, 60-க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றிணைந்துள்ளன. சர்வதேச கடல் சட்டங்களின்படி கடல் வழிப் போக்குவரத்தின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என அவை திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளன.
ஈரான்–ஓமன் இடையே அமைந்துள்ள ஹார்முஸ் ஜலசந்தி உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றாகும். அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே பிப்ரவரி 28 அன்று போர் தொடங்குவதற்கு முன், உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு தேவைகளில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு இந்த வழியாகவே கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அமெரிக்காவுடன் உள்ள போரின் பின்னணியில் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடி வைத்துள்ளதாகவும், அந்தப் பாதையில் தன் கட்டுப்பாட்டை வலுப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த வழியைப் பயன்படுத்தும் கப்பல்கள் முறையான கட்டணம் செலுத்த வேண்டும் என ஈரான் தரப்பு வலியுறுத்தி வருகிறது.
இதற்கு எதிராக, ஐரோப்பிய யூனியனின் அனைத்து உறுப்பு நாடுகளுடன் ஆஸ்திரேலியா, ஜப்பான், பிரிட்டன், கனடா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் சேர்ந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. அந்த கூட்டறிக்கையை ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுக் கொள்கை தலைவர் கஜா கல்லாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
சமூக வலைதள பதிவில் கல்லாஸ், சர்வதேச கடல் வழிப் போக்குவரத்து பணம் செலுத்துபவர்களுக்கு மட்டும் உரியதல்ல; அனைவருக்கும் திறந்திருக்க வேண்டும் என குறிப்பிட்டார். நீர்வழிகளை சுயலாபத்திற்காக வளைக்க முயல்வோருக்கு இது தெளிவான எச்சரிக்கை என்றும், “கட்டணமும் இல்லை, சுங்க வரியும் இல்லை” என்ற உலகளாவிய நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.





