ரோம்: உலகம் முழுதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் லியோவுக்கு, ரோமில் உள்ள மருத்துவமனையில் நுரையீரல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றதாக வாடிகன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
சமீபத்திய பரிசோதனைகளில் நுரையீரலில் கட்டி ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அதை அகற்ற அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். திட்டமிட்டபடி அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக வாடிகன் கூறியது.
வாடிகன் அறிக்கையின்படி, போப்பின் வலது நுரையீரலின் கீழ்ப்பகுதி சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த அறுவை சிகிச்சையில் எந்த சிக்கலும் இன்றி அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சை நேரத்தில் மேற்கொண்ட திசுப் பரிசோதனையில், நுரையீரல் அடினோகார்சினோமா புற்றுநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு போப் லியோ கண்விழித்து சுயநினைவுக்கு வந்ததாகவும், இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இரவு உணவருந்தியதுடன், தனிச் செயலாளர்கள் மற்றும் வாடிகன் ஊழியர்களுடன் கலந்துரையாடியதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அவர் சுமார் ஒரு வாரம் ஓய்வில் இருப்பார் என்றும், அகற்றப்பட்ட திசுக்கள் குறித்து அடுத்த சில தினங்களில் கூடுதல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் வாடிகன் தெரிவித்துள்ளது.





