2005 அக்டோபரில் அமலுக்கு வந்த தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்டம் 21 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், நாட்டின் தகவல் ஆணையங்களில் நிலுவை அதிகரித்துள்ளதாக ஒரு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தும் சதார்க் நாக்ரிக் சங்கதன் வெளியிட்ட அறிக்கையின்படி, ஜூன் 30 நிலவரமாக நாடு முழுதும் உள்ள 28 தகவல் ஆணையங்களில் மொத்தம் 3.85 லட்சம் புகார்கள் மற்றும் மேல்முறையீடுகள் நிலுவையில் உள்ளன.

மேலும், 9 தகவல் ஆணையங்களில் 37,701 புகார்கள் மீது எந்த உத்தரவும் வழங்காமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது. மத்திய தகவல் ஆணையம் 14,603 புகார்களை திருப்பி அனுப்பியதாகவும், மஹாராஷ்டிர மாநில தகவல் ஆணையம் 14,140 புகார்களை திருப்பி அனுப்பி அடுத்த இடத்தில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பீஹாரில் 4,417 புகார்களும், குஜராத்தில் 3,276 புகார்களும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

ஐந்து மாநிலங்கள் திருப்பி அனுப்பப்பட்ட புகார்கள் மற்றும் மேல்முறையீடுகள் குறித்த தரவுகளை வழங்கவில்லை என்றும், 14 தகவல் ஆணையங்கள் வழக்குகளை முடிக்க ஓராண்டு அல்லது அதற்கும் மேலாக எடுத்துக்கொள்கின்றன என்றும் அறிக்கை தெரிவிக்கிறது. திரிபுரா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் புகார்களுக்கு தீர்வு கிடைக்க 18 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாகவும், மத்திய தகவல் ஆணையம் திருப்பி அனுப்பிய மேல்முறையீடுகளில் 95% மீண்டும் தாக்கல் செய்யப்படுவதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.