இலங்கை தமிழர் அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சவுதி அரேபியாவின் உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக இலங்கை அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழரான சிவராசா, வேலைக்காக சவுதி அரேபியா சென்றிருந்தார். அங்கு சமூக வலைதளத்தில் இலங்கையைச் சேர்ந்த ஒருவரின் பதிவுக்கு பதிலாக அவர் இடப்பட்ட கருத்து மத நிந்தனை எனக் கருதி வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை விசாரித்த உள்ளூர் நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனையும் 30 லட்சம் சவுதி ரியால் அபராதமும் விதித்திருந்தது.
மரண தண்டனையை ரத்து செய்ய இலங்கை அரசு தூதரக மற்றும் சட்டப்பூர்வ முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டதாக அமைச்சர் தெரிவித்தார். தனது பேஸ்புக் பதிவில், இந்த நிவாரணம் கிடைக்க சவுதி அரசு, இலங்கை தூதரகம் மற்றும் இலங்கை வெளியுறவுத்துறை அதிகாரிகள் வழங்கிய ஒத்துழைப்பை அவர் பாராட்டியுள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





