சவுதி அரேபியாவில் பதற்றமான சூழல் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஈரான் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதியை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் நடந்த தாக்குதலில் இந்தியர் ஒருவர் உட்பட 12 பேர் உயிரிழந்ததாகவும், 11 இந்தியர்கள் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

பாதுகாப்பு காரணங்களால் கிங் காலித் சர்வதேச விமான நிலையம் அக்டோபர் 17 வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த சூழ்நிலையை தொடர்ந்து, சவுதியில் உள்ள இந்தியர்களுக்காக இந்திய தூதரகம் சில அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. தாயகம் திரும்ப விரும்பும் இந்தியர்கள் கத்தார், பஹ்ரைன் போன்ற அருகிலுள்ள வளைகுடா நாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களை பயன்படுத்தி பயணம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உதவிக்காக 24 மணி நேர தூதரகக் கட்டுப்பாட்டு அறையை +966-1 1-488469 என்ற எண்ணிலும், வாட்ஸ்அப் மூலம் +966-536216082 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெட்டா மற்றும் மதீனா செல்லும் இந்திய உம்ரா யாத்திரிகர்களுக்கும் ஜெட்டாவில் உள்ள இந்திய துணைத்தூதரகம் இதேபோன்ற வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.