புதுடில்லி: எஸ்.ஐ.ஆர். (வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்) பணியில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளை எதிர்த்து, காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய இண்டி கூட்டணி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த மனுவில் 14 குறைகள் இருப்பதாக உச்ச நீதிமன்ற பதிவாளர் சுட்டிக்காட்டியுள்ளார். மனுவை திருத்தி மீண்டும் தாக்கல் செய்த பிறகே வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பதிவாளர் குறிப்பிட்ட குறைகளில், நீதிமன்ற கட்டணத்தில் ரூ.220 குறைவாக செலுத்தப்பட்டிருப்பதும், மனுதாரர்களின் அதிகாரப்பூர்வ வக்காலத்து ஆவணங்கள் இணைக்கப்படாததும் அடங்கும்.

மேலும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் அடையாள அட்டை நகல் தெளிவாக இல்லாதது, மனுவின் சில பகுதிகளில் எழுத்தளவு மிகச் சிறியதாக இருப்பது, முக்கியமான இரண்டு ஆவணங்களின் வண்ண நகல்கள் சமர்ப்பிக்கப்படாதது ஆகியவையும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதற்கு கூடுதலாக, படிக்க முடியாத அச்சுப் பிரதிகள், விடுபட்ட பக்கங்கள், மொழிபெயர்ப்பு இல்லாத பிராந்திய மொழி பக்கங்கள், பக்க எண்களில் முரண்பாடுகள் போன்றவை சேர்த்து மொத்தம் 14 குறைகள் உள்ளதாக பதிவாளர் தெரிவித்தார்.