புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி குறித்து காங்கிரஸ் எம்.பி.வும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகள் தொடர்பான அவதூறு வழக்கில், மஹாராஷ்டிரா விசாரணை நீதிமன்றத்தின் நடவடிக்கைகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
இந்த வழக்கு 2019ல் ராஜஸ்தானில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ரபேல் விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி பிரதமரை விமர்சித்து பேசியதிலிருந்து உருவானது. அந்த பேச்சு பிரதமரின் நற்பெயருக்கு சேதம் விளைவிப்பதாகக் கூறி, பா.ஜ.வைச் சேர்ந்த எம்.எச். ஸ்ரீஸ்ரீமால் மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவதூறு புகார் அளித்தார்.
இந்த வழக்கில் தமக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யக் கோரி ராகுல் காந்தி மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால் கடந்த செப்டம்பர் 8 அன்று மும்பை உயர் நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது.
அந்த உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் அபரேஷ் குமார் சிங் அடங்கிய அமர்வு இரு தரப்பு வாதங்களையும் கேட்டது.
இதனைத் தொடர்ந்து, மாநில அரசு மற்றும் புகார்தாரருக்கு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட அமர்வு, விசாரணை நீதிமன்றத்தின் நடவடிக்கைகளையும் இடைக்காலமாக நிறுத்தி உத்தரவிட்டது.





